கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையின்போது வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் பிறந்த குழந்தை யின் கண் பார்வை பறிபோனது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகி மற்றும் இரு டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் குளத்துப் பாளையம் கே.டி.ஆர்.சாமிநகர் பகுதியைச் சேர்ந்தவர் மு.தேவேந்திரன் (30). தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி செளந்தர்யா. இவர் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி முதல் கோவை கோவையில் உள்ள தனியார் மருத்து மனையில் பிரசவ சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு, கடந்த மார்ச் 5-ம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் கண் பார்வை பாதிப்பு குறித்து மாநகர போலீஸில் தந்தை தேவேந்திரன் புகார் அளித்தார்.
குழந்தை பிறக்கும்போது ஆரோக்கி யமாக இருந்தது. மருத்துவமனை நிர்வாகம் குழந்தை பிறந்தது முதல் தாயையும் சேயையும் பிரித்து விட்டனர்.
குழந்தையை மார்ச் 7-ம் தேதி வரை எங்கள் கண்ணில் காட்டவில்லை. குழந் தைக்கு தொற்று ஏற்படும். ஆகையால் தாய்ப்பாலும் 5 நாள்களுக்குக் கொடுக்கக் கூடாது எனத் தெரிவித்தனர். இந்நிலை யில், குழந்தையின் இரு கண்களும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட் டிருக்கிறது. ஆகையால், தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என 9-ம் தேதி அனுப்பி வைத்தனர்.
கண் மருத்துவமனையில், குழந்தையை பரிசோதித்த மருத்து வர்கள், குழந்தையின் இடது மணிக் கட்டில் உணவு செலுத்துவதற்காக குத்தப்பட்ட ஊசியால் அந்த இடத்தில் சீழ் பிடித்து கண்ணை பாதித்துவிட்டது. குழந்தைக்கு கண்பார்வை திரும்ப வாய்ப்பில்லை எனக் கூறி அருகே உள்ள தனியார் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் பார்வை இழப்புக்கு இடது மணிக்கட்டில் தவறாக குத்தப்பட்ட ஊசியே காரணம் என அங்குள்ள டாக்டர் தெரிவித்ததாக போலீஸில் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.
இதன்பேரில், குழந்தை பிறந்த தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள்் சந்திரலேகா, தீபா, கீதா பாரதி ஆகிய 3 பேர் மீது அஜாக்கிரதையாக சிகிச்சை அளித்து கொடுங்காயம் விளைவித்தல் (338) என்ற பிரிவின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
நீதிமன்ற தலையீடால் நீதி?:
குழந்தையின் கண் பார்வை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 9-ம் தேதி, மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பெற்றோர் மனு அளித்துள்ளனர். மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், அதன் மீது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம், விசா ரணைக்குப் பின்னர் மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்ய கடந்த சில நாள்களுக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்தே, சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மீது 338 என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரூ. 5 கோடி கேட்டு வழக்கு
இது குறித்து மனுதாரரின் வழக்கறிஞர் எஸ்.ஆறுமுகம் கூறுகையில், தவறான மற்றும் அஜாக்கிரதையான சிகிச்சை காரணமாக குழந்தையின் கண் பார்வை பறிபோனதற்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தும் போலீஸார் முன்னதாக வழக்குப் பதிவு செய்யவில்லை. நாங்கள் வற்புறுத்தியபோதும் வழக்குப் பதிவு செய்யவில்லை.
இதனால், உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்குப் பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது. அதுவும், பிணையில் வரக்கூடிய அளவுக்கு சாதாரண வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு தெரியப்படுத்திய பின்னரும் இதுவரை நடவடிக்கை இல்லை.
தற்போது, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம் என்றார்.
நீதி வேண்டும்
குழந்தையின் தந்தை கூறுகையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், எல்லாம் முடிந்த பின்னர் குழந்தையின் பார்வை பறிபோனதற்கு எங்களிடம் மன்னிப்பு கோரியது. அவர்கள் முன்கூட்டியே, சரியான சிகிச்சை அளித்திருந்தால் குழந்தையின் பார்வை பறிபோய் இருக்காது.
எங்களிடம் முன்கூட்டியே தெரியப்படுத்தி இருந்தால்கூட வேறு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்று குணப்படுத்தி இருப்போம். ஆனால், எல்லாம் முடிந்த பின்னர்தான் எங்களிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்த பின்னர் தேர்தல் வேலையில் உள்ளோம் எனக் கூறி வழக்குப் பதிவுசெய்யவில்லை.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் எங்களது வழக்கறிஞர் மூலமாக வழக்குப் பதிவுசெய்யக் கோரி உத்தரவு பெற்றோம். தமிழக அரசுதான் குழந்தைக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்றார்.
ஆணையர் மறுப்பு
இது குறித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் கேட்டபோது, புகார் வந்தபோது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினேன். புகாரின் மீதான உண்மைத் தன்மை குறித்து விசாரணை செய்த பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஏதும் உத்தரவிடவில்லை என்றார்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் நிர்வாகியிடம் விளக்கம் பெற தொலைபேசியில் முயன்றபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.