கொடைக்கானலில் விசாரணைக்காக சென்ற போலீஸார் இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் இன்று இரவு (நவம்பர் 16) பெண் காவலர்கள் இருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தவழியாக இருசக்கரவாகனத்தில் வந்த கொடைக்கானல் அன்னைதெரசா நகரை சேர்ந்த சையது இப்ராகிம் (27) என்பவரின் வாகனத்தை பெண் காவலர்கள் நிறுத்தியுள்ளனர்.
அப்போது பெண் காவலர்களை தகாதவார்த்தையால் பேசி, மிரட்டல் விடுத்துவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் சையது இப்ராகிம் சென்றுள்ளார்.
இதுகுறித்து பெண் காவலர்கள் கொடைக்கானல் காவல்நிலையத்தில் பணியில் இருந்த போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து தலைமை காவலர் சின்னச்சாமி, காவலர் சீனி ஆகியோர் அன்னைதெரசா நகர் சென்று வீட்டில் இருந்த சையது இப்ராகிமிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது உரிய பதில் அளிக்காமல் தான் வைத்திருந்த கத்தியால் போலீஸார் இருவரையும் குத்தியுள்ளார்.
இதில் சின்னச்சாமி, சீனி ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் இருவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தப்பியோடிய சையது இப்ராகிமை போலீஸார் தேடி வருகின்றனர். போலீஸார் கத்தியால் குத்தப்பட்ட தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., சீனிவாசன், கொடைக்கானல் சென்று நேரில் விசாரணை நடத்தினார்.
தப்பியோடிய சையது இப்ராகிம், கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் பிடிபட்டார். இவரை கைது செய்த போலீஸார் விசாரணைக்காக கொடைக்கானல் காவல்நிலையம் அழைத்துச்சென்றனர்.