தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலில், “வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக, வரும் நவம்பர் 18 ஆம் தேதி, தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழையும். பிற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். காற்று மணிக்கு 40 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.