புதுச்சேரியில் சிகப்பு வண்ணத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழைபெய்தது. மழையால் அன்றாட கூலி தொழிலாளர்கள், விவசாய கூலிகள், மீனவர்கள், கட்டிட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசியல்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து கட்டட தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரம், மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்கப் படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இதையடுத்து விவசாய கூலிகள், வீட்டு வேலை செய்வோர், அன்றாட உடல் உழைப்பு தொழிலாளர்கள் என அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பல்வேறு அரசியல்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இதை வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, " ஏற்கனவே மீனவர், கட்டட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். இவர்கள் தவிர மற்ற சிகப்பு ரேஷன்கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் மழைநிவாரணமாக வழங்கப்படும். ஏற்கனவே கட்டட தொழிலாளர்கள், மீனவர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் மழை நிவாரணம் பெறுவர். மொத்த ரேஷன்கார்டில் எஞ்சிய 30 ஆயிரம் சிகப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மழை நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டார்.