வடகிழக்குப் பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆய்வுக் குழுவினர் அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் தரப்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பயிர்ச் சேத விவரங்களை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இக்குழுவில், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெரியகருப்பன், ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
சென்னை வந்த ஆய்வுக் குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பாதிப்பு நிலவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ளனர். அதில் வடகிழக்குப் பருவமழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களைச் சரிபார்த்தபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் இருந்து மழையால் பாதித்த விளைநிலங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு விரைவில் கடிதம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.