சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருச்சியைச் சேர்ந்த இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (27). இவர், கடந்த ஜூன் மாதம், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று சிறுமியை மீட்டனர். மாதவனை பிடித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து கீரனூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாதவனை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சத்யா நேற்று அளித்த தீர்ப்பு:
குற்றம் சாட்டப்பட்ட மாதவனுக்கு பாலியல் துன்புறுத்தல் பிரிவின் கீழ் சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். சிறுமியை தாக்கிய குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி சிறை பிடித்து வைத்த குற்றத்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் மாதவன் அடைக்கப்பட்டார்.