என்.வி.ரமணா 
தமிழகம்

நீதித்துறையின் அனைத்து நிலைகளிலும் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

டெல்லி விக்யான் பவனில் தேசிய சட்டச் சேவை ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) சார்பில் சட்ட விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் உள்ளிட்ட நீதிபதிகள் மத்தியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:

நாட்டு மக்களுக்கு நீதிமன்றம் தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லை. மக்களுக்கு சேவை வழங்கும் கட்டமைப்பின் ஒரு பகுதியாக நாம் இருந்தாலும் தேவையானவர்களுக்கு எதிர்பார்த்த அளவில் சட்ட உதவிகள் கிடைப்பதில்லை என்பது நிதர்சனம். கண்ணியமான வாழ்க்கையை வாழ விரும்பும் மக்களும் நீதி கிடைப்பதில் அடிக்கடி சவால்களை சந்தித்து வருகின்றனர்.

இதற்கு அவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பதுதான் முக்கியக்காரணமாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். விசாரணை நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை வைத்தே நாட்டின் ஒட்டுமொத்த நீதித் துறை குறித்தும்மக்கள் கணித்து வைத்திருக்கின்றனர்.

ஏனெனில் மாவட்ட நீதிமன்றங்களில்தான் உண்மையான வழக்குகள் அதிகம் தொடுக்கப்படுகின்றன. கீழ்நிலையில் வலுவான நீதித் துறையை உருவாக்காமல், ஆரோக்கியமான நீதித் துறையை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. எனவே, நீதித் துறையின் அனைத்து நிலைகளிலும் நேர்மையும், சுதந்திரமும் காக்கப்பட வேண்டும்; ஊக்குவிக்கப்பட வேண்டும். போற்றப்படவேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம்நம்பிக்கையுடன் அளித்துள்ள பொறுப்புகளை நாம் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் கையாண்டு வருகிறோம். இதேபோன்று, நீதித் துறை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் கடைசி நம்பிக்கையாக நீதித் துறை விளங்குகிறது.

நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வுகள் அளிக்கும் உத்தரவு களும் தீர்ப்புகளும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. எனவே, அந்த தீர்ப்புகள் எளிய மொழியில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, உச்ச நீதிமன்ற நீதிபதியும், என்ஏஎல்எஸ்ஏ செயல் தலைவருமான யு.யு.லலித், நீதிபதி கான்வில்கர், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT