விழுப்புரம் மாவட்டம் தளவானூருக்கும், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலத்துக்கும் இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் தடுப்பணைக் கட்டப்பட்டு 2020 அக்டோபரில் திறக்கப்பட்டது. தளவானூரில் 3 மதகுகளுடனும், ஏனதிரிமங்கலத்தில் 3 மதகுகளுடனும் 10 அடி உயரத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டது.
திறந்து வைக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஏனதிரிமங்கலத்தில் உள்ள தடுப்பணை மதகுகள் உடைந்து விழுந்தன. அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தளவானூரில் உள்ள தடுப்பணையின் மற்றொரு பகுதி உடைந்தது.
தளவானூரில் உள்ள 3 மதகுகளும் உடைந்து சரிந்து விழுந்துஉள்ளதால் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேறியது. தடுப்பணைக்கு அருகே உள்ள கரைப் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு, பக்கவாட்டு வயல் வெளிகளுக்குள் தண்ணீர் புகுந்துவருகிறது. ஊருக்குள் வெள்ளம் புகுந்து விடும் என்ற அச்சம் நிலவி வருவதால் உடைந்து சரிந்துள்ள தடுப்பணையை வெடி வைத்து தகர்த்து முற்றிலுமாக அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி, உடைந்த தளவானூர் தடுப்பணையில் வெடி மருத்து வைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இப்பணியின் போது உடைந்து சரிந்து விழுந்திருந்த தடுப்பணையில் 100 ஜெலட்டின் குச்சிகளை வைத்து வெடிக்கச் செய்தனர். வெடி வெடித்தும் தடுப்பணை உடையவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் 2 வது முறையாக தடுப்பணையை தகர்க்க வெடி வைக்கப்பட்டது. இதில் தடுப்பணையின் ஒரு பகுதி தகர்ந்தது. ஆனால் முழுமையாக இடிந்து விழவில்லை. இன்றும் இப்பணி தொடரும் என தெரிகிறது. தடுப்பணை உடைந்தது தொடர்பாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என ஆட்சியர் மோகனிடம் கேட்டபோது, “இதுகுறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். தற்போது வயல்வெளிகளுக்குள் நீர் புகுந்து விடாமல் இருக்க தடுப்பணையை தகர்க்கும் முடிவு எடுக்கப்பட்டது” என்றார்.