ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி ரவிச்சந்திரனுக்கு 1 மாதம் பரோல் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பநாயக்கன்பட்டியில் வசிக்கும் இவரது தாயார் ராஜேஸ்வரிக்கு கண்களில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே தனது தாயாரை உடன் இருந்து கவனிப்பதற்காக ரவிச்சந்திரன் ஒரு மாதம் பரோல் கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மத்திய சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி ரவிச்சந்திரனுக்கு நவ.14-ம் தேதி முதல் ஒரு மாதம் பரோல் வழங்க சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் வழக்கறிஞர் கூறியபோது, "இன்று (நவ.16) ரவிச்சந்திரன் பரோலில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. சிறையில் இருந்து வெளியே செல்லும் நாளில் இருந்து ஒரு மாதம் கணக்கிட்டு மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்படுவார்" என்றார்.