கோவை மாநகரில், அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களுடன் வலம் வரும் வாகன ஓட்டுநர்கள் மீது, போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்துவருகின்றனர்.
கோவையில் நடைபெறும் 70 சதவீத விபத்துகள், உயிரிழப்புகள் இருசக்கர வாகன ஓட்டுநர்களால் ஏற்படுவது காவல்துறையினர் ஆய்வில் தெரியவந்துள்ளது. மாநகரில் முக்கிய வீதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வாகனங்களில் செல்ல காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். இருப்பினும், விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லும் இளைஞர்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை பொருத்தி வாகனத்தை ஓட்டுவதால், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
சமூக செயல்பாட்டாளர் ஆவாரம்பாளையம் ராஜ்குமார் கூறும்போது,‘‘இருசக்கர வாகனங்களில் உள்ள சைலன்ஸர்களின் ஒலித்திறன் அதிகபட்சம் 80 டெசிபல் அளவுக்குள் இருக்க வேண்டும். ஆனால், இளைஞர்கள், மாணவர்கள் அதிக குதிரைத் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை வாங்கி, அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை பொருத்தி வலம் வருகின்றனர். இவ்வாறு, மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், செவித்திறனை பாதிக்கும் வகையிலும் அதிக ஒலியை ஏற்படுத்திக் கொண்டு, அதிவேகமாக இவர்கள் செல்வதால் மற்ற வாகன ஓட்டுநர்கள் மிரண்டு, விபத்தில் சிக்குகின்றனர்’’ என்றார்.
மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில்குமார் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது,‘‘அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை பொருத்திய வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அசல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சைலன்ஸர்களை, பழையபடி மாற்றிய பின்னரே ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன.
அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை மாற்றித் தரக்கூடாது என இருசக்கர வாகன விற்பனையாளர்கள், வாகன மெக்கானிக்குகள் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும் இதை கண்காணிக்க வலியுறுத்தியுள்ளோம். மேலும், நம்பர் பிளேட் விதிமீறல், அதிவேகம் ஆகிய காரணங்களுக்காகவும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
மாநகரில் நடப்பாண்டு அதிவேகமாக வாகனத்தில் சென்றதாக 12,110 பேர், சிக்னல்களில் நிற்காமல் சென்றதாக 1,05,309 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 6,027 பேர், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 6,71,241 பேர், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 27,328 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நடப்பாண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.3 கோடியே 72 லட்சத்து 32 ஆயிரத்து 360 தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.