புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு அனைத்து துறைகளிலும் 25 சத இடஒதுக்கீடு தரலாம் என்ற ஆய்வுக்குழு அறிக்கை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டு, ஐந்து ஆண்டுகளாக பதில் வராத சூழல் நிலவுகிறது.
புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் கடந்த 1985-ல்தொடங்கப்பட்ட போது புதுச்சேரியை சேர்ந்தோர் படிக்க 25 சதவீத இடஒதுக்கீடு கோரப்பட்டது. பல்கலைக்கழகம் தொடங்கியது முதல் 10 ஆண்டுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கென்று தனி ஒதுக்கீடு எதுவும் அளிக்கப்படவில்லை.
காலப்போக்கில், புதுச்சேரி மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் பெரிதும் புறக்கணிக்கப்பட்டபோது, புதுச்சேரி மாணவர்களுக்கென்று தனி இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
இதனை உணர்ந்த அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ஞானம் பல்கலைக்கழக கல்விக்குகுழுவின் உத்தரவுபடி, புதுச்சேரி கலைக் கல்லூரிகளில் இல்லாத புதுவைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பட்டமேற்படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு அளித்து 1997-ம் ஆண்டு உத்தரவிட்டார். அன்றிலிருந்து இந்த இட ஒதுக்கீடு முறை அமலுக்கு வந்தது.
அப்போது 8 படிப்புகளுக்கு வழங்கப்பட்ட இந்த ஒதுக்கீடு படிப்படியாக 18 படிப்புகளுக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் 2008-2012 ஆண்டுகளில், புதிதாக நிறைய படிப்புகளைத் தொடங்கியது. ஆனால், அவற்றில் இடஒதுக்கீடு அளிக்கத் தவறி விட்டது.
இதையடுத்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, தனதுஅறிக்கையில் அனைத்து படிப்புகளிலும் இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று பரிந்துரைத்தது.
அதன்பிறகு வந்த துணைவேந்தர் இந்த முடிவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அனுமதிக்கு அனுப்பி வைத்தார். இந்தக் கோப்பு அனுப்பி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் அமைச்சகத்திடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 66க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் இருந்தா லும் 18 பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரப்படுகிறது. இக்கல்வியாண்டிலும் இடஒதுக் கீடு இல்லை.
ஜிப்மரில் 27 சத இடஒதுக்கீடு தரும் நிலையில் மத்திய பல்கலைக்கழகம் புதுச்சேரி மாணவர்களை நிராகரிக்கிறது.
இதுபற்றி கல்வியமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, "டெல்லி செல்லும்போது மத்திய அமைச்சர்களை சந்தித்து இதுபற்றி வலியுறுத்துவேன்" என்று குறிப்பிட்டார்.