விழுப்புரம் - புதுச்சேரி - நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக 2 குளங்களை தூர்க்கவும், 1,000 பனை மரங்களை அகற்றவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் 10 கிராமங்களின் நீராதாரங்களை காக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்த உள்ளனர்.
விழுப்புரம் - புதுச்சேரி - நாகப்பட்டினம் தேசிய நான்கு வழிப்பாதை வேலை தற்போது நடந்து வருகிறது. இதற்காக மதகடிப்பட்டு கிராமத்தில் சாலைக்கு அருகில் செல்லும் நீர்வழிப் பாதையை (ஓடை) மூடப் போவதாகவும், அதேபோல் மதகடிப்பட்டு சந்தை தோப்பு அருகாமையில் சுமார் 1,000 சதுர அடி கொண்ட குளம் மற்றும் திருவாண்டார்கோவில் இந்திய உணவு கழகம் எதிர்புறம் உள்ள 1,000 சதுரடி கொண்ட குளம் ஆகியவற்றை மண்கொண்டு தூர்த்தடைக்க எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும், திருபுவனை கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஏரிக்கரை மற்றும் அதில் உள்ள சுமார் 1,000 பனை மரங்கள், ஆலமரம் போன்றவற்றை தேசிய நெடுஞ்சாலை விரிவாக் கத்திற்காக அப்புறபடுத்த எல்லைகள் வரையறை செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில் நீராதாரங் களையும், மரங்களையும் காக்கக்கோரி போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கத்தினர் முடிவு எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலர் ரவி கூறுகையில், “இரு குளங்கள், ஏரி மற்றும் குளத்துக்கான நீர்வழிப்பாதைகள் மூடலால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும். இப்பகுதி முழுக்க நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் நடக்கிறது. அத்துடன் திருபுவனையில் ஏரிக்கரையிலுள்ள 1,000 பனை மரங்கள் புதுச்சேரி வரலாற்று அடையாளம். நாள் ஒன்றுக்கு 500 லிட்டர் கள், பதனீர் கிடைக்கிறது. பனைமரத் தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. இயற்கை சீற்றங்களை தடுக்கிறது.
அப்பகுதி நிலத்தடி நீரை பாதுகாக்கும் அரணாக உள்ளது. விவசாயிகள், பொதுமக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற வகையில் ஏரிக்கரை, குளம் மற்றும் நீர்வழிப் பாதைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்போது போடப்பட்டுள்ள அளவு கல்லை எதிர்புறம் அமைத்திடுவதால் இவை அனைத்தும் பாதுகாக்கப்படும். அதை செய்யாததால் போராட்டம் நடத்த உள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.