கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட செய்தித்தாளில் 23.09.2020 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது.
இதையடுத்து கரோனா பரவல் காரணமாகவும், நிர்வாகக் காரணங்களுக்காகவும் நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது. இருப்பினும் இதுநாள்வரையில், மேற்கண்ட பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், மேற்கண்ட 23.09.2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில், இந்நேரடி நியமன நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டவையாகும் என ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருப்பதால் தற்போது ரத்து செய்யப்படுகிறது. இவ்வறிவிக்கை ரத்து செய்யப்படுவது குறித்து விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
எனவே சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்வது தொடர்பான அறிவிக்கை பின்னர் தனியே வெளியிடப்படும்” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.