சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப் பித்த கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவினர், நேர்காணலுக்கு இதுவரை அழைப்பில்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்தவர் களுக்கு நேர்காணல் முடிவடைந் துள்ளது. அதேபோல் திமுக விலும் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர் களுக்கான நேர்காணல் முடிந்து விட்டது. தமாகா, தேமுதிகவிலும் நேர்காணல் நடைபெற்றுள்ளது.
நிர்வாகிகள் கலக்கம்
ஆனால், அதிமுக சார்பில் விருப்பமனு கொடுத்தவர்கள் யாரும் இதுவரை நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட 250-க்கும் மேற்பட்டோர் மனு செய்துள்ளனர். இதில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காத்திருக்கின்றனர்.
ஏற்கெனவே முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டு அனுபவம் பெற்றுள்ள பச்சைமால், தளவாய்சுந்தரம், நாஞ்சில் முருகேசன் ஆகியோருக்கே, இம்முறை போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகத்து டனேயே தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
சமீபத்தில் ஜெயலலிதா நடத்திய நேர்காணல் குழுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் பங்கேற்றது, இங்குள்ள மற்ற நிர்வாகிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாரும் எதிர்பாராதவிதமாக புதுமுகங்கள், பெண் வேட்பாளர் களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படலாம் எனவும் கூறப்படுகிறது. ‘கட்சிக்கு விசுவாச மான சாதாரண தொண்டர்களை அடையாளம் கண்டு தொகுதி வாரியாக அம்மா நிறுத்தப் போறாங்க பாருங்க’ என்கின்றனர் அதிமுகவினர்.
காத்திருக்க வேண்டியதில்லை
அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் விருப்பமனு கொடுத்தவர்களை இதுவரை அழைக்கவில்லை.
அதேநேரம் வேட்பாளர்களை அம்மாவே தேர்வு செய்து அறிவிப்பார். வேட்பாளர்கள் யார் என்று தெரிய ரொம்பநாள் காத்திருக்க வேண்டியதில்லை. வளர்பிறை காலம் முடிவதற்குள் யாரும் எதிர்பாராத நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் பாருங்கள்!’ என்றார் அவர்.
ஜெயலலிதா நடத்திய நேர்காணல் குழுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜஸ்டின் செல்வராஜ், தமிழ்மகன் உசேன் பங்கேற்றது, இங்குள்ள நிர்வாகிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.