கோவையில் பாலியல் தொல்லை காரணமாகப் பள்ளி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய முதன்மைக் கல்வி அலுவலருக்குப் பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 11-ம் தேதி அன்று தனது வீட்டு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். உக்கடம் பகுதி போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தியதில், தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர மேற்கு அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியைக் கைது செய்தனர்.
மேலும், பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத முன்னாள் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனைக் கைது செய்யக் கோரியும் மாணவியின் உடலை வாங்க மறுத்தும் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்த மீரா ஜாக்சனை போலீஸார் நேற்று கைது செய்து கோவை அழைத்து வந்தனர். இதனையடுத்து, பல்வேறு கட்ட சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாணவியின் உடலை வீட்டிற்குக் கொண்டுசென்றனர். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் நேற்று மாலை மாணவி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “மாணவி தற்கொலை விவகாரத்தில், விசாரணை சரியான விதத்தில் நடைபெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களிடம் கூற முடியாத விஷயங்கள், குறைகள், பிரச்சினைகளைப் பள்ளி மாணவர்கள் 14417 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். அவர்களுக்கு உதவ த்தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
இந்த நிலையில், கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி அதனை அறிக்கையாகத் தாக்கல் செய்ய கோவை முதன்மைக் கல்வி அதிகாரிக்கு பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாத வகையில் வரும் 23-ம் தேதி கல்வி அலுவலர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.