தமிழகம்

கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி நதிகளைத் தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளுடன் இணைக்க வேண்டும்: புதுவை ஆளுநர்

சி.ஞானபிரகாஷ்

புதுச்சேரி பயனடையும் விதமாக கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி நதிகளைத் தென்பெண்ணை மற்றும் சங்கராபரணி ஆறுகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தென்னிந்திய மாநில கவுன்சில் மாநாட்டில் துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதியில் 29-வது தென்னிந்திய மாநில கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையும், முதல்வர் ரங்கசாமியும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் புதுச்சேரி சார்பில் ஆளுநர் எடுத்துரைத்த கருத்துகள் தொடர்பாக ராஜ்நிவாஸ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

”புதுச்சேரியில் தொழில் துறையை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த மத்திய அரசின் நிதி உதவி தேவை. கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மணலை தமிழ்நாட்டில் இருந்து தரவும், கூடுதலாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் அனுமதி தரவேண்டும்.

நிதி ஆயோக் மூலம் புதுச்சேரி மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும். கிழக்கு கடற்பகுதியில் புதுச்சேரியிலிருந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திராவுக்குப் படகுப் போக்குவரத்து தொடங்க மத்திய அரசின் உதவி தேவை.

புதுச்சேரி பயனடையும் விதமாக கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி நதிகளைத் தென்பெண்ணை மற்றும் சங்கராபரணி ஆறுகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியை தேசிய, சர்வதேச அளவிலான சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ஹெலிபோர்ட், நீர் விமான நிலையம் போன்ற உள் கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய அரசின் நிதியுதவி தேவை என்று வலியுறுத்தினார்”.

இவ்வாறு ராஜ்நிவாஸ் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT