கரோனா மற்றும் பருவமழை காரணமாக விழுப்புரத்தில் பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளுக்கு வந்த குழந்தைகளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இனிப்பு, பூங்கொத்துகளைக் கொடுத்து வரவேற்றனர்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒன்றரை ஆண்டுகள் பள்ளி மாணவர்கள் அவரவர்களின் வீடுகளில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாகக் கல்வி பயின்று வந்தனர். தடுப்பூசி மூலம் கரோனா பரவல் தாக்கம் குறைந்ததையடுத்து, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 9 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கின. பின்னர் தொற்றுப் பரவலின் நிலையை ஆய்வு செய்த தமிழக அரசு, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதனிடையே, நவம்பர் 4-ம் தேதி வியாழக்கிழமையன்று தீபாவளி பண்டிகை காரணமாக விடுமுறையைக் கொண்டாடும் வகையில் அடுத்தடுத்து வந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 10 நாட்களாகத் தொடர் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போலத் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது சீரமைப்புப் பணி நிறைவடைந்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் 14 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
மாவட்டக் கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கான வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டன. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான 1,655 பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதனிடையே, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் இனிப்பு, பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர். மேலும், பள்ளி நிர்வாகம் சார்பில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.