சென்னையில் மழை நீரை அகற்றும் பணிகள் இன்றுடன் முடிவடையும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக, சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. இதையடுத்து மாநகராட்சிப் பணியாளர்கள் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அடங்கிய 13 காவல் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 7 நாட்களாக சுழற்சி முறையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும், மழை நீர் சூழ்ந்த பகுதிகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்தும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழை நீர் வடியத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு ககன்தீப் சிங் பேடி அளித்த பேட்டியில் கூறுகையில், “சென்னையில் மழை நீரை அகற்றும் பணிகள் இன்றுடன் முழுமையாக முடிவடையும். சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது.
இன்னும் நான்கு இடங்களில் மழை நீர் தேக்கம் உள்ளது. அவை விரைவில் அகற்றப்படும். புளியந்தோப்பு, சூளை ஆகிய இடங்களிலும் மழை நீர் வெளியேற்றப்பட்டு, மின்சாரம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.