தமிழகம்

கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: மழைக்காலம் முடிந்ததும் நடவடிக்கை என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யார் குற்றவாளிகளோ அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் என்றும் முதல்வர் கூறினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடக்கத்திலேயே அதிகனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக எல்லா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள்,தெருக்களில் தண்ணீர் தேங்கியதாலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்தஞாயிற்றுக்கிழமை முதல் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி எழும்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர், திருவிகநகர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேற்று பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.

திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட சங்கர பக்தன் தெரு, கொன்னூர் நெடுஞ்சாலை, வில்லிவாக்கம் லாக்மா நகர், கொளத்தூர் மயிலப்பா தெரு, நேரு மண்டபம், மாதவரம் நெடுஞ்சாலை, கமலம்மாள் திருமண மண்டபம் ஆகியபகுதிகளில் மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பெரம்பூர் பல்லவன் சாலை, கே.கே.நகர் அவென்யு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை பார்வையிட்டு சரி செய்ய உத்தரவிட்டார். 70 அடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, பெரவள்ளூர் பகுதிகளில் மழைநீரை அகற்றும் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார்.

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட வெற்றிச்செல்வி அன்பழகன் நகரில் அமைந்துள்ள எஸ்ஐபி நினைவுஅறக்கட்டளை காப்பகத்தைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப்பொருட்களை வழங்கி வருகிறேன்.காவிரி பாசன மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பயிர் சேத விவரங்களை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறது. இன்று அல்லது நாளை சேத விவரங்கள் அடங்கிய அறிக்கையை அவர்கள் அளிப்பார்கள். அதன் பிறகு முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் நிச்சயமாக செய்வோம்.

மழை, வெள்ளத்தால் காவிரி பாசன மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. பாதிப்புகள் குறித்த மொத்த கணக்கீடு வந்தபின்பு அதையெல்லாம் தயார் செய்து, நிதி கோரி பிரதமருக்கு அனுப்பி வைப்போம். தேவைப்பட்டால், தமிழக அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ பிரதமரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்க ஏற்பாடு செய்வோம்.

சென்னையில் பட்டாளம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது உண்மைதான். தேங்கிய நீரை விரைவாக அப்புறப்படுத்தி விட்டோம். ஆனால், பழைய செய்தியை இன்னும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. என்னுடைய வேலை மக்களுக்கு பணியாற்றுவது. அதற்காகத்தான் மக்கள்என்னை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். பெரிய வெற்றியை கொடுத்தார்கள். நான் இன்றைக்கும் சொல்கிறேன், ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்து வருகிறோம். அதுதான் எங்களுடைய கொள்கை. அந்த வழியில் என்னுடைய பயணம் இருக்கும்.

எதிர்க்கட்சிகள் என்ன புகார் சொன்னாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. கடந்த ஆட்சியில் அவர்கள் செய்த அக்கிரமத்தை, அநியாயத்தை இந்த மழைக்காலம் முடிந்ததற்கு பிறகுஅதற்கென விசாரணை ஆணையம்அமைக்கப்பட்டு, எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்பது கண்டறியப்படும். யார் குற்றவாளிகளோ அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர். வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று கன்னியாகுமரி செல்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

ஆய்வின்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT