நிவாரணப் பணிகளை முதலில் கவனிக்கவேண்டும். வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து விவாதம் செய்யக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தி.நகர், அண்ணா நகர் பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் காசிமேடு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 படகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்தப் பிரச்சினையில் அரசு தனிகவனம் செலுத்தி, மீனவர்களுக்கு முழு இழப்பீடு வழங்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நானும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கி வருகிறோம். நாங்கள் தனித்தனியாகப் பார்வையிடுவதில் எந்த பாகுபாடும் கிடையாது. தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் ஒன்றுகூடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்கும் பணியைத்தான் முதலில் முழுமையாகக் கவனிக்கவேண்டும்.
மேலும், வெள்ளப் தடுப்பு பணிகள் தொடர்பாக விவாதம் செய்யக் கூடாது. அதை அதிமுக செய்யாது. இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.
ரூ.10 லட்சம் இழப்பீடு
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.
எனவே, தலா ரூ.10 லட்சம் அல்லது அதற்கும்மேலாக நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.