திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், “போஸ்டர்கள், பேனர்கள், கட்-அவுட்டுகள் என எனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாடாமல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். பிறந்த நாளில் நான் சென்னையில் இருக்க மாட்டேன். எனவே, திமுகவினர் யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்’’ என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதனை ஏற்று திமுகவினர் அனைத்துப் பகுதிகளிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ‘தமிழ்நிலம் தழைத்தோங்க வைக்கும் தளபதி’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர்கள் பா.விஜய், விவேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.