பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 70 அடி சாலை மற்றும் சிவ இளங்கோ சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற அப்பகுதியில் உள்ள கால்வாய்களின் அடைப்புகளை சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் சரி செய்தனர். 
தமிழகம்

மழைநீர் தேங்கிய பகுதிகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு: சென்னையில் வெள்ள மீட்பு பணியில் முத்திரை பதித்த காவல்துறை

இ.ராமகிருஷ்ணன்

கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில், பிற துறையினருடன் இணைந்து பணியாற்றி சென்னை காவல்துறை முத்திரை பதித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக, சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அடங்கிய 13 சென்னை பெருநகர காவல் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 7 நாட்களாக சுழற்சி முறையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்தும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். அதற்காக ட்ரோன்களை கையாளும் 10 தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய தனியார் குழுவினரின் ஒத்துழைப்புடன் நவீன வசதிகளுடன் கூடிய 4 ட்ரோன் கேமராக்கள் மற்றும் தண்ணீரில் மிதந்து தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட 1 ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் (13-ம் தேதி) மாலை 6 மணிவரை 2,248 ஆண்கள், 2,438 பெண்கள், 1,133 குழந்தைகள் என மொத்தம் 5,819 பேரை காவல்துறையினர் மீட்டு 92 தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த மாதம் 28-ம் தேதி முதல் சென்னையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தீபாவளி பாதுகாப்பு ஏற்பாட்டிலும் அதே அளவு போலீஸார் ஈடுபட்டனர். தீபாவளி முடிந்து தொடர் மழை கொட்டியது. இதையடுத்து தீபாவளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் ஓய்வின்றி பணியாற்றுகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்” என்றனர்.

பேரிடரின்போது போலீஸாரின் பணி மனநிறைவை தருவதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் காவல் ஆணையர்கள் செந்தில்குமார், கண்ணன், பிரதீப் குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT