திமுக ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களில், சென்னையில் மட்டும் 720 கி.மீ. தூரத்துக்கு மழை நீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில்நேற்று 950 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியை பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம், திருவள்ளூர் அருகே கைவண்டூர், குப்பம்மாள் சத்திரம், திருத்தணி, பாப்பிரெட்டிபள்ளி பகுதிகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
அதுமட்டுமல்லாமல் காட்டுப்பாக்கம், திருவாலங்காடு அருகேஆற்காடுகுப்பம் பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகங்களை வழங்கினார்.
மேலும், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசருடன் மோட்டார் சைக்கிளில் சென்று, காட்டுப்பாக்கம் துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.
திருத்தணி, பாப்பிரெட்டிபள்ளி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தவணை கரோனா தடுப்பூசியை 75 சதவீதம் பேரும், 2-ம்தவணை தடுப்பூசியை 33 சதவீதம்பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழக மருத்துவத் துறை வரலாற்றில் ஒரே நாளில் 6000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது பெரிய சாதனை.
மழைநீர் தொடர்பாக தொலைநோக்கு திட்டம் எது என்பதை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவித்தால் நன்றாக இருக்கும். 10 ஆண்டாக ஆட்சியில் இருந்தஅதிமுக, பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் என்ன செய்தார்கள் என்று எல்.முருகன் அதிமுகவிடம் கேட்டிருக்க வேண்டும்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்களில், சென்னையில் மட்டும் 720 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன என்றார். இந்நிகழ்வுகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித் துறை இயக்குநர் குருநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.