கார்த்திகை தீபத்திருநாளில் அகல் விளக்குகள் மூலம் வெளிச்சம் கொடுக்கும் மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வட கிழக்கு பருவ மழையால் இருண்டு கிடக்கிறது. அவர்களின் வாழ்வில் ஒளி வீச தமிழக அரசும், பொது மக்களும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாள் 3 நாட்களுக்கு கொண்டாடுவது வழக்கம். கார்த்திகை தீபம் என்றால் அகல் விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபடுவது ஐதீகம். இத் திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிப்பில் வேலூர் மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், கொசப்பேட்டை, சலவன்பேட்டை, கொசத்தெரு, காட்பாடி வள்ளிமலை கூட்டுச்சாலை, குடியாத்தம், திருவலம் ஆகிய பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் இவர்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கியது. இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா பரவல் குறைந்த பிறகு மீண்டும் மண்பாண்ட தயாரிப்பில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு வடகிழக்கு பருவமழையால் மீண்டும் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
கார்த்திகை தீபத்திருநாள் வரும் 19-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அகல் விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பருவமழையால் கேள்விக் குறியாக மாறிவிட்டதாகவும், தமிழக அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரண உதவித் தொகையை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வேலூரில் மண்பாண்ட தொழில் செய்து வரும் சேகர் என்பவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘அகல் விளக்குகள்மேல் மக்களுக்கு இருந்த மோகம், கரோனா தொற்று காரணமாக குறைந்தது. களி மண் தட்டுபாட்டால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் முடங்கிப்போனது. வேலூர் மாவட்டத்தில் இத்தொழிலை நம்பி 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அக்டோபர் மாதம் அகல் விளக்கு தயாரிப்பை தொடங்கினோம். வேலூர் அடுத்த கணியம்பாடி, சாத்துமதுரை, லாலாப்பேட்டை போன்ற இடங்களில் இருந்து களிமண் எடுத்து வருகிறோம்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, 3 யூனிட் களிமண் லோடு ரூ.4 ஆயிரம் வரை கிடைத்தது. அதுவே, தற்போது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் கொடுத்தால் தான் கிடைக்கிறது.
ஒரு நாளைக்கு 800 முதல் 1,000 அகல்விளக்குகள் தயாரிக்க முடியும். இதன் மூலம் தினசரி ரூ.400 முதல் ரூ.500 வரை கூலியாக கிடைக்கும்.
வடகிழக்கு பருவமழையால் எங்கள் தொழில் தற்போது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. களிமண் மழை நீரில் நனைத்து கரைந்து விட்டது. தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகளும் தொடர் மழையால் சந்தைப்படுத்த முடியவில்லை. தீபத்திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பல ஆயிரம் மதிப்பிலான அகல்விளக்குள் தேக்கமடைந்துள்ளன. அகல் விளக்குகளை மொத்தமாக வாங்க நினைத்தவர்கள் கூட மழை காரணமாக அகல் விளக்குகளை வாங்க முன்வரவில்லை. இதே நிலை நீடித்தால் வரும் பொங்கல் பண்டிகைக்கூட எங்களால் பொங்கல் பானைகளை தயாரிக்க முடியாத நிலை உருவாகிவிடும்.
ஆகவே, வடகிழக்கு பருவமழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மண்பாண்ட தொழிலா ளர்களுக்கும் தமிழக அரசு உரிய நிவாரணத்தொகையை வழங்க வேண்டும். அதேபோல, தீபத்திருநாளில் களிமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குளை வாங்கி எங்களது குடும்பத்தில் விளக்கேற்ற பொதுமக்களும் முன்வர வேண்டும். இதுதொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் நிவாரண உதவித்தொகை கேட்டு கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்’’ என்றார்.