ஜவ்வாதுமலையில் பெய்த கனமழை எதிரொலியாக நீர்வரத்து அதிகரித்ததால் செண்பகதோப்பு, குப்பநத்தம், மிருகண்டா நதி ஆகிய 3 அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆறு களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட் டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் நேற்று முன் தினம் இரவு முதல் அதிகளவு மழை பெய்து வருகிறது. மழை யின் தாக்கம் நேற்றும் நீடித்ததால் மலையடிவாரத்தில் உள்ள குப்பநத்தம் அணை, செண்பகதோப்பு அணை மற்றும் மிருகண்டா நதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அணைப் பகுதியிலும் மிதமான மழை பெய்துள்ளதால், அணைகளில் இருந்து வெளி யேற்றப்படும் நீரின் அளவு படிப் படியாக அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக, செய்யாறு மற்றும் கமண்டல நாகநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அணைகளை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் ஆற்றங் கரையோர கிராமங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. நேற்று மாலை வரை 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போளூரில் இருந்து ஜவ்வாதுமலை செல்லும் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் விழுந்துள்ளன. இதேபோல், ஜவ்வாதுமலையில் உள்ள பல வழித்தடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குப்பநத்தம் அணை
59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 57.07 அடியாக பராமரிக் கப்படுகிறது. அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வந்த 1,000 கனஅடி தண்ணீரும், செய்யாற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, அணைக்கு வந்த 2 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.
குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப் படுவதால், செய்யாற்றில் கடந்த 38 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கொட்டாவூர் அண்ணாநகரில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.
மேலும், தடுப்பு சுவர் அடித்து செல்லப்பட்டது. குப்பநத்தம் – கல்லாத்தூர் இடையே மண் சரிவு காரணமாக 10 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. செங்கம் காயிதே மில்லத் நகரில், வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால், வீட்டின் மாடியில் தஞ்சமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
செண்பகதோப்பு அணை
62.32 அடி உயரம் உள்ள செண்பகதோப்பு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 54.64 அடியாக இருந்தது. இந்நிலையில் ஜவ்வாது மலையில் திடீரென பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால், அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது, படிப்படியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 4 மணியளவில் 60 அடியை எட்டியது.
இதன் எதிரொலியாக, அணையில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டதால், கமண்டல நதி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அத்திமூரை சூழ்ந்த வெள்ளநீர்
கமண்டல நதியை ஒட்டியுள்ள கிராமங்களான மல்லிகாபுரம், கமண்டலாபுரம், ராமநாதபுரம், கேசவாபும், வெல்லூர் என ஆரணி வரை சுமார் 30 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஜவ்வாதுமலையில் பெய்த கன மழையால் மஞ்சளாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அத்திமூர் உள்ளிட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழந்துள்ளது.
மிருகண்டா நதி அணை
22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதியின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 20.34 அடியாக இருந்தது. கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 22 அடியை எட்டியது. இதனால், அணைக்கு விநாடிக்கு வந்த 3 ஆயிரம் கனஅடி தண்ணீரும், செய்யாற்றில் வெளியேற்றப்பட்டது.
சாத்தனூர் அணை
119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு வரும் 2,900 கனஅடி தண்ணீரும், தென்பெண்ணையாற்றில் முழுமையாக வெளி யேற்றப்படுகிறது. அணையில் 3,609 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.