தமிழகம்

ஜெய்பீம் சிறப்பான படம்; ஆனால் எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் எடுத்திருக்க வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை

செய்திப்பிரிவு

ஜெய்பீம் சிறப்பான படம்தான், ஆனால் எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் எடுத்திருக்க வேண்டும் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடரும் விவாதம்

இப்படம் குறித்து தொடர்ந்து விவாதக் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.

விழுப்புரம் அருகே குறிப்பிட்ட ஒரு சமூக மக்களின் வாழ்க்கையை அவர்களுக்கு நேர்ந்த துயர உண்மைச் சம்பவத்தை அதன் வலியோடு எடுக்கப்பட்டுள்ளதாக பாராட்டப்படும் அதேநேரத்தில் இன்னொரு சமுதாயத்தை தேவையில்லாமல் படத்தில் வம்புக்கு இழுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன.

அண்மையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்திரித்துள்ளதாக சூர்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சூர்யா பதிலளித்தபோது, ''எந்தஒரு சமுதாயத்தையும் அவமதிக்கவில்லை.

சிலரது யோசனைக்குப் பிறகு சில திருத்தங்களும் படத்தில் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதையும் தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜெய்பீம் குறித்து படம் வெளியாகி பல நாட்களைக்கடந்த நிலையிலும் சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலிருந்தும் சூர்யா நீதியரசர் சந்துருவாக தோன்றி நடித்துள்ள இப்படத்திற்கு வரவேற்பும் அதேநேரம் விமர்சனங்களும் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

இன்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் ஜெய்பீம் குறித்து கூறியதாவது:

ஓர் உண்மைச் சம்பவத்தை எடுத்துள்ளார்கள். நீதியரசர் சந்துரு ஐயா வாழ்க்கையை இந்தப் படத்தில் டெபிக்ட் பண்றாங்க. சில இடங்களில் உண்மை நிகழ்வை சரியாக காட்டியிருக்கலாம். குறிப்பாக அந்தப் பெயர்கள், அந்த சமுதாயம் அதெல்லாம்கூட சரியாக சொல்லியிருக்கலாம்.

சிறப்பான படம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக, அந்த உண்மை நிகழ்வை சரியான பெயர்களை சூட்டி, எந்த ஒரு சமுதாயத்தையும் கூட காயப்படுத்தாமல் அந்த மெஸேஜை சொல்லியிருக்கலாம் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT