கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த வீடுகள், விளைநிலங்கள், நீர்நிலைகள், கால்நடைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி இரு நாட்களில் தொடங்கப்படும் என அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பெரியகருப்பன், மனோதங்கராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட தோவாளை, பெரியகுளம், சுசீந்திரம் பழையாறு, வெள்ளமடம் பகுதிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. தோவாளை, செண்பகராமன்புதூர், திருப்பதிசாரம், அகஸ்தீஸ்வரம், தேரூர், தேரேக்கால்புதூர், புரவசேரி, மணவாளகுறிச்சி, சடையமங்கலம், முட்டைக்காடு, கிள்ளியூர், பார்த்திபபுரம், கலிங்கராஜபுரம், பள்ளிகல், வைக்கலூர், மங்காடு, விளவங்கோடு, குன்னத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
பொய்கை அணை பாய்ந்து மறுகால் செல்லும் சுற்றுவட்டார பகுதிகளான செண்பகராமன்புதூர், தெள்ளாந்தி, திருப்பதிசாரம், ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தோவாளை பெரிய குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான குடியிருப்புகளில் வெள்ளநீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சுசீந்திரம் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அக்கரை, தேரூர், பாலகிருஷ்ணன்புதூர், பரப்புவிளை உள்ளிட்ட பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது.
கனமழையால் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்துறை, தன்னார்வலர்கள் வாயிலாக பாதுகாப்பாக மீட்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை தேவைகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் எவ்வளவு வீடுகள், விளைநிலங்கள், கால்நடைகள், நீர்நிலைகள் சேதமடைந்துள்ளது என்பதை கணக்கெடுக்கும் பணி இரு நாட்களில் துவக்கப்பட்டு இறுதி அறிக்கை முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் வழங்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவில் குளங்கள், ஆறுகள் உள்ளதால் இனிவரும் காலத்தில் அவற்றை கண்காணிக்கவும், தூர்வாரவும், சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆய்வின்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமி, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.