ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்றுகுருப் பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது.
குருபகவான் நேற்று மாலை 6.31 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, குரு பரிகார ஸ்தலமான திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேஉள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவானுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தங்கக் கவசம் அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர், குருப் பெயர்ச்சி நிகழும் நேரமான சரியாக 6.31 மணிக்கு குரு பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
குருப் பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகியராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளதால், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குருப் பெயர்ச்சி விழாவில் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், குருப் பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன.
திட்டையில் ஹோமம்
இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நேற்று மாலை 4 மணி முதல்5.30 மணிவரை குருப் பெயர்ச்சி ஹோமம் நடைபெற்றது. குருப் பெயர்ச்சியின்போது குரு பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கரோனா பரவல் காரணமாக, ஹோமம் மற்றும் அபிஷேகத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை
இக்கோயிலில் நவ.15-ம் தேதி ஒரு நாள் மட்டும் லட்சார்ச்சனையும், நவ.21-ம் தேதி சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெற உள்ளன.