தமிழகம்

கிராமப்புற இளைஞர்களுக்காக தொகுதிவாரியாக ரூ.3 கோடி செலவில் மினி விளையாட்டு அரங்கம்: முதற்கட்டமாக நிலம் கண்டறியும் பணிகள் தொடக்கம்

கோ.கார்த்திக்

தமிழக அரசு கிராமப்புற இளைஞர்களிடையே விளையாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், கிராமப் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள, நீண்ட தூரம் பயணித்து அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள விளையாட்டு அரங்கை தேடிச் செல்லும் நிலை உள்ளது.

எனவே, கிராமப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மினிவிளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசின் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, தொகுதிவாரியாக தலா ரூ.3 கோடி செலவில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே விளையாட்டு அரங்கம் உள்ள தொகுதிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மினிவிளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறைசார்பில் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் தகுதியான நிலத்தைக் கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விளையாட்டு அரங்கம் அமைக்க 6 முதல் 7 ஏக்கர் பரப்பளவு நிலம் தேவைப்படுகிறது. இதற்காக, பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று நிலங்களைக் கண்டறியும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி கூறும்போது, "இத்திட்டத்துக்காக சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதிமேம்பாட்டு நிதியில் இருந்துஒருபகுதியைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கிராமப்பகுதி இளைஞர்கள் உரிய பயிற்சிகளுடன் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.

இதுகுறித்து, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் விளையாட்டு, இளைஞர் நலத் துறைஅதிகாரிகள் கூறும்போது, "திருப்போரூர், செங்கல்பட்டு தொகுதிகளில் முதற்கட்டமாக மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நிலத்தைக் கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் நிறைவடைந்த பின்,உரிய அறிவிப்புகளுடன் பணிகள் தொடங்கப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT