தமிழகம்

ராஜஸ்தானில் பணியிலுள்ள கணவரைச் சந்திக்க வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

ராஜஸ்தானில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் தனது கணவரைச் சந்திப்பதற்காக ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்த மனைவிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பேபி ஷாலினி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''என் கணவர் துரைசிங், எல்லைப் பாதுகாப்புப் படையில் ஹவில்தாராகப் பணியாற்றி வருகிறார். சில நாட்களாக அவரை போனில் தொடர்புகொள்ள முடியவில்லை. என் கணவர் எங்கிருக்கிறார்? எப்படியிருக்கிறார்? எனத் தெரியவில்லை. எனவே என் கணவரைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில், “மனுதாரரின் புகாரின் பேரில் அவரது கணவரின் நிலை குறித்து போலீஸார் விசாரித்துள்ளனர். இதில், கடந்த முறை சொந்த ஊர் வந்தபோது மனுதாரரை அவரது கணவர் சந்திக்காமல் தவிர்த்துள்ளார். ஆனால், தற்போது வரை போன் மூலம் தொடர்பில்தான் உள்ளனர். அவரது கணவர் ராஜஸ்தானில் தற்போதும் பணியில் இருக்கிறார்.

ராஜஸ்தானில் உள்ள தனது கணவரைத் தமிழகத்திற்கு வரவழைக்கும் நோக்கத்துடன் மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பணத்தை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் 2 வாரத்தில் மனுதாரர் செலுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT