தமிழகம்

இருளர், நரிக்குறவ மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்: புதுவை ஆளுநர்

அ.முன்னடியான்

இருளர், நரிக்குறவ சமுதாய மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கருவடிக் குப்பத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மற்றும் நரிக்குறவ மக்கள் வசிக்கும் நரிக்குறவர் காலனியைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (நவ.13) நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததுடன், நரிக்குறவர்கள் வசிக்கும் வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டார். அங்கிருந்த குழந்தைகளையும் தூக்கிக் கொஞ்சினார்.

தொடர்ந்து புதுச்சேரி செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இருளர் மற்றும் நரிக்குறவ மக்களுக்கு மழை, வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காலாப்பட்டு தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘கருவடிக் குப்பத்தில் வசிக்கும் இருளர் மற்றும் நரிக்குறவ மக்கள் மழையால் பாதிக்கப்பட்டிருப்பதால் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளோம். இங்கு வசிக்கும் மக்களின் வீடுகளைப் பார்வையிட்டேன்.

வீடுகள் மழையால் ஒழுகுவதால் உடனே தார்ப்பாய் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் வாழ்கின்ற சூழ்நிலையை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவர்கள் என்னிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் வாழ்வதற்கு இடமில்லை எனக் கூறியுள்ளார்கள்.

தொண்டு நிறுவனங்களின் முயற்சியுடன் 5-ம் வகுப்பு வரை படிக்கிறார்கள். அவர்கள் மேலும் படிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். அவர்களுடைய வாழிடம் மேம்படுத்தப்பட வேண்டும். அந்த மக்களுக்கு மரியாதைக்குரிய ஒரு வாழ்வு அமைய வேண்டும். சில இடங்களில் கடை வைக்க அனுமதியில்லை எனவும் கூறினார்கள்.

பிரதமர் கூறியது போல அவர்களை சுயசார்புள்ள மக்களாக மாற்றுவதற்கு (ஆத்ம நிர்பார்) கைத்தொழில், சுயதொழில் தொடங்கப் பயிற்சிகள் அளிக்கப்படும். கைத்தொழில் பயிற்சி, குழந்தைகள் படிக்க வசதி, சுத்தமான உடை, மருத்துவ சிகிச்சை, வாழிடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, மாற்றுத் தொழில் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். சட்டப்பேரவை உறுப்பினர் கல்யாணசுந்தரமும் தொடர்ந்து பல உதவிகளைச் செய்து வருகிறார்.

இங்குள்ள குழந்தைகள் கேட்டரிங், நர்சிங் போன்ற கல்வி பயின்றுள்ளனர். அவர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடைய வாழ்வியலையும் வாழ்கின்ற சூழ்நிலையும் அறிந்துகொள்வதற்காகப் பார்வையிட்டேன். இருளர், நரிக்குறவ மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.’’

இவ்வாறு துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT