கோவையில் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகரக் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த உக்கடம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மாணவி தற்கொலை செய்த அறையில், அவர் எழுதி வைத்த ஒரு கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், சில மாணவிகள், ஒரு ஆசிரியரையும் குறிப்பிட்டு அவர்களைச் சும்மா விடக்கூடாது என எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து உக்கடம் காவல்துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த மாணவிக்கு, அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதனால் மனமுடைந்தே மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மகளிர் காவல்துறையினர் போக்சோ, மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சக மாணவர்கள் உயிரிழந்த மாணவியின் வீட்டின் அருகே இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளியை மூட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.