மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் கடந்த 2017, ஏப்.23-ல் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சோலூர்மட்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதான தீபு, சதீஷன், சந்தோஷ்சாமி ஆகியோர், முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி, வி.கே.சசிகலா,இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட்மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகிய 9 பேரை சாட்சிகளாக விசாரிக்கக் கோரி, நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அதை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனைமட்டும் விசாரிக்க அனுமதி அளித்து. மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமிஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் கே.பழனிசாமிக்கு உள்ள தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம்தவறிவிட்டதாகவும், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடந்தகொள்ளை சம்பவத்தில் கோடநாடு பங்களாவில் இருந்துமாயமான பொருட்கள் குறித்துசசிகலா, இளவரசிக்கு மட்டும்தான்தெரியும் என்றும், புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும், முக்கியக் குற்றவாளிகளை தப்பவிட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக பதில் அளிக்க காலஅவகாசம் வழங்க வேண்டுமென காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் டிச.10-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.