சென்னை கிழக்கு தாம்பரம், கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், காரப்பாக்கம், கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பொதுமக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, தரமணி, வேளச்சேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி உள்ளிட்டோருடன் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு சரியாக திட்டமிடாததால்தான் சென்னையில் மட்டும் 523 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலேயே பெரும்பாலான இடங்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் குடிநீர், பால், சாப்பாடு கிடைக்காத அவநிலை உள்ளது. அரசு இனியாவது வேகமாக செயல்பட வேண்டும்.
சென்னையில் மழைநீர் வடிகால்கள் சரியாக தூர்வாரப்படாததால்தான் தண்ணீர் வெளியேறவில்லை. அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாக அனுபவம் நிறைந்த160 பொறியாளர்களை வேறு மாநகராட்சிகளுக்கு மாற்றியுள்னர். அனுபவம் இல்லாதவர்கள் இங்கு வந்ததால் அவர்களுக்கு தண்ணீர் தேக்கம், நீரை வெளியேற்றும் வழிகள் குறித்து தெரியவில்லை. நிர்வாக திறமையில்லாத அரசாங்கம் இருப்பதால்தான் சென்னை மக்கள் அவலநிலையை சந்தித்துள்ளனர்.
மழைநீரை அகற்ற முடியாத நிலையில் எங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற முடியாத நிலையில், அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது: ஓபிஎஸ்
சென்னை கோட்டூர்புரம், மேற்கு மாம்பலம், வில்லிவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைப்பார்வையிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அரிசி, பருப்பு, பாய், போர்வை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சென்னையில் பல இடங்களில் இன்னும் நீர் வடியாத சூழல் உள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழுவீச்சில் நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களை விரைவாக மீட்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியை குற்றம் சொல்லி பொறுப்பை அரசு தட்டிக்கழிக்க கூடாது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதிமுகஆட்சி மீது பழிபோடக் கூடாது" என்றார்.
வி.கே.சசிகலா கோரிக்கை
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பாதிப்புகளை வி.கே.சசிகலா பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல்கூறினார்.
தியாகராயநகரில் அவர் பேசும்போது, ‘‘பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றும் வகையில் தமிழக அரசுக்கு வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் விரைவாக செயல்பட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.