செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், நெரும்பூர் கிராமத்தில் இருந்து இரும்புலிச்சேரி, எடையாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வகையில் பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்திருந்தது. இது கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டது.
இதனால், மேற்கண்ட கிராமமக்கள் தீவுபோல் தனித்து விடப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் போக்குவரத்துக்காக தற்காலிகமாக பாலாற்றில் படகுகளை இயக்கியது. பின்னர், ஆற்றின் குறுக்கே சிமென்ட் குழாய்கள் புதைக்கப்பட்டு தற்காலிமாக மண்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையும் அடுத்த மழை வெள்ளத்திலேயே சேதமடைந்தது.
இந்நிலையில், தற்போது பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஏற்கெனவே சேதமடைந்திருந்த தரைப்பாலம், தற்காலிக மண்சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால், கிராம மக்கள் 8 கி.மீ. சுற்றிக்கொண்டு எடையாத்தூர், பாண்டூர் இடையே பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மூலம் நகரப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். எனவே, இந்த மழை வெள்ளத்துக்கு பிறகாவது மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, இரும்புலிச்சேரி கிராம மக்கள் கூறியதாவது:
வெள்ளத்தால் இரும்புலிச்சேரி தீவுபோல் தனித்துவிடப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலாற்றின் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: இரும்புலிச்சேரி கிராம மக்களுக்கு தேவையான அனைத்துஅத்தியாவசிய பொருட்களும், எளிதாக கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன என்றனர்.