பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படவுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் ஆண்டினை குறிக்கும் வண்ணம், அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அந்த நாணயத்தின் வெளிவட்டம் அலுமினியம் மற்றும் வெண்கல உலோக கலவையால் செய்யப்பட்டுள்ளது. நாணயத்தின் மையப்பகுதி கப்ரோ நிக்கலால் உருவாக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் ஒருபுறம் அசோக ஸ்தூபியும், மறுபுறம் அம்பேத்கரின் உருவமும் இடம்பெற்றிருக்கும். அம்பேத்கரின் உருவம் பொறிக்கப்பட்ட பகுதிகளில் ‘125th BIRTH ANNIVERSARY OF Dr.B.R.AMBEDKAR’ என்று எழுதப்பட்டிருக்கும். இந்தியிலும் அதே வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.