தமிழகம்

நாளை முதல் வைகை அணையிலிருந்து 58 கிராம திட்ட கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு: அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

நாளை முதல் வைகை அணையிலிருந்து 58 கிராம திட்ட கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், வைகை அணையிலிருந்து 58 கிராம திட்ட கால்வாய்க்கு 300 மி.க. அடி தண்ணீரினை 13.11.2021 முதல் நாளொன்றுக்கு 150 கன அடி/விநாடி வீதம் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், மதுரை மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 2284.86 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கடந்த காலத்தில் வறட்சியால் விவசாயமே பொய்த்து விட்டதால் குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர். இந்த காலகட்டத்தில்தான் வேலைவாய்ப்புக்காக இங்குள்ள இளைஞர்கள் பலர் வடமாநிலங்களுக்கு மிட்டாய் கம்பெனிகளுக்கு கொத்தடிமைகளாகச் சென்றனர்.

இதற்குத் தீர்வாக 1996-ம் ஆண்டு தேனி மாவட்டம் வைகை அணையில் தென்மேற்குப் பகுதியில் இருந்து உபரிநீராக வெளியேறும் தண்ணீரைச் சேமித்து ஆண்டிப்பட்டி, வத்தலகுண்டு, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்களுக்கு கொண்டு செல்வதற்கு 58 கிராம பாசனக் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது.

தற்போது இந்தத் திட்டம் 110 கிராமங்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் ஆரம்பிக்கும்போது வைத்த 58 கிராம பாசனக் கால்வாய் பெயரே தற்போது வரை தொடர்கிறது.

இந்தத் திட்டத்திற்காக ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 1999-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. பிரதான கால்வாய் 27.735 கி.மீ. நீளத்திலும், இடது கிளைக்கால்வாய் 11.925 கி.மீ. நீளத்திலும், வலது கிளைக்கால்வாய் 10.24 கி.மீ. நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. 6 மீட்டர் முதல் 18 மீட்டர் உயரம் வரை 230 பிரம்மாண்ட தூண்களுடன் தொட்டி பாலம் அமைத்து இந்த 58 கிராம பாசனக் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

இடையில் நிதி பற்றாக்குறையால் இந்தத் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு மீண்டும் ரூ.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. ஆனாலும், பணிகள் விரைவாக நடக்காததால் 18 ஆண்டாக இந்தத் திட்டம் நிறைவு பெறாமல் இழுத்தடிக்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் நிறைவுபெற்றது.

தற்போது வைகை அணை 69 அடியைக் கடந்துள்ளதால் உபரி நீர் 58 கிராம கால்வாயில் திறந்து விடப்படுகிறது.

SCROLL FOR NEXT