திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகக் கொட்டித் தீர்த்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. வாணியம்பாடியில் உழவர் சந்தையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 2 வியாபாரிகள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. கனமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்குக் கடந்த ஒரு வாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளது. விடாமல் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பருவமழை பெரிய அளவில் பெய்யவில்லை. ஆண்டுதோறும் சராசரியாக 619 மி.மீ. மழை பெய்து வந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் 987 மி.மீ. மழையளவு பெய்துள்ளது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத மழை கொட்டித் தீர்த்தது. இதனால், அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அணை முழுமையாக நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 266 கன அடியாக உள்ளது. அதே அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. 5 ஏரிகளில் 75% நீரும், 3 ஏரிகளில் 50% நீரும், 2 ஏரிகளில் 25% நீரும், 25 சதவீதத்துக்கும் குறைவான நீருடன் 18 ஏரிகளும் உள்ளன. அதேபோல உள்ளாட்சி அமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள 90% சதவீதம் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை பெய்தது. வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது. இந்நிலையில், வாணியம்பாடி உழவர் சந்தையில் வியாபாரிகள் இன்று காலை வழக்கமான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது உழவர் சந்தை கடைக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இன்று காலை இடிந்து உழவர் சந்தைக் கடைகள் மீது விழுந்தது. இதில், ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை பகுதியைச் சேர்ந்த இளவரசன் (40), ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த குமார் (42) ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர்.
உடனே, அவர்கள் மீட்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்ததும், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் ஆகியோர் உழவர் சந்தை பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமார் மற்றும் இளவரசன் ஆகியோருக்கு அரசின் நிவாரணத் தொகையாக தலா 4,300 ரூபாயை ஆட்சியர் அமர்குஷ்வாஹா வழங்கி ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே, வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு அடுத்த சி.எல்.காலனியில் மழைநீர் புகுந்ததால் அங்கு வசித்து வரும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் மழை நீரை அகற்ற வலியுறுத்தி வாணியம்பாடி - வளையாம்பட்டு சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வருவாய்க் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, திருப்பத்தூர் ஏடிஎஸ்பி சுப்புராஜூ, வட்டாட்சியர் மோகன் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, அவர்களை மாற்று இடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினர் செய்து கொடுத்தனர்.
ஆம்பூர் வட்டத்துக்கு உட்பட்ட வெங்கடசமுத்திரம், அரங்கல்துருகம், தோட்டாளம், வீராங்குப்பம், துத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் மழையால் இடிந்து விழுந்தன. தோட்டாளம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி உமாபதி (49) என்பவர் இன்று காலை வீட்டில் இருந்தபோது அவர் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் வருவாய்த் துறையினருடன் சென்று மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினார். விண்ணமங்கலம் அடுத்த எம்.சி.காலனி பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீரை மோட்டார் மூலம் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைக்குச் செல்லும் வளைவுப் பாதைகளில் இன்று காலை உருண்டு விழுந்த பாறைகளைச் சாலை பராமரிப்பாளர்கள் அகற்றி, போக்குவரத்தைச் சீர் செய்தனர்.