வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 1-ல் மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மின் உற்பத்தி 12 மணி நேரத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் மாவட்டம், வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (12.11.2021) காலை அனல் மின்நிலையத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிச் செயற்பொறியாளர்களுடன், கடும் மழையினால் நிறுத்தி வைக்கப்படிருந்த அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கியது குறித்து ஆய்வு நடத்தினார். இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (உற்பத்தி) உ.பா.எழினி, இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் நேற்று நிலக்கரி இருப்பு தளம் மற்றும் நீர் வெளியேறும் பகுதியிலும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, தொடர்ந்து, அங்கு தேங்கியுள்ள மழை நீரை அகற்றப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பணியாளர்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் பணி மேற்கொள்ளப்பட்டு மின் உற்பத்தி 12 மணி நேரத்திற்குள் உடனடியாக இன்று (12.11.2021) காலை தொடங்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், ''தமிழகத்தின் தற்போதைய உச்சபட்ச மின்தேவை 11,000 மெகா வாட்கள். இந்த மின் தேவை, சொந்த மின் உற்பத்தி மூலம் 3,500 மெகாவாட்டும், மத்தியத் தொகுப்பிலிருந்து 4,500 மெகாவாட்டும் இதர மின் உற்பத்தி மூலம் 3,000 மெகாவாட்டும் பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மின்தேவை 9,000 மெகாவாட் முதல் 11,000 மெகாவாட்டாக உள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனல் மின் நிலையங்களான வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 1-ன் அலகு 3, வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 2-ன் அலகு 1, அலகு 2, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் அலகு 2, அலகு 3 மற்றும் அலகு 5, மேட்டூர் அனல் மின் நிலையம் நிலை 1-ன் அலகு 2, அலகு 3 மற்றும் அலகு 4, மேட்டூர் அனல் மின் நிலையம் நிலை 2-ன் அலகு 1 ஆகியவை இயக்கத்தில் உள்ளன.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக, வீசிய காற்றின் வேகம் மற்றும் அதிகபட்ச மழையினாலும் செடி, கொடிகள் வேரோடு சாய்ந்து மழைநீர் வடிகால் கால்வாயை அடைத்ததனால், மழைநீர்க் கால்வாயின் வழியாக வெளியேறுவதில் தடை ஏற்பட்டதாலும் அனல் மின் நிலையத்தின் நிலக்கரி சேமிப்புத் தளத்தில் மழைநீர் 2 அடிக்கும் மேலாகத் தேங்கியதினாலும், நிலக்கரியைக் கையாளுவதில் ஏற்பட்ட தடையினாலும் மற்றும் பலத்த காற்று வீசுவதால் கப்பலில் இருந்து நேரடியாக நிலக்கரியை இறக்க முடியாத காரணத்தினாலும் வட சென்னை அனல் மின் நிலையம் நிலை 1-இல் தற்காலிமாக நிறுத்தப்பட்ட 2 அலகுகளில் 1 அலகு மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கியது.
இன்னொரு அலகானது தேவைப்படும் மின் பளுவைப் பொறுத்து இயக்கத்திற்குக் கொண்டு வரத் தயார் நிலையில் உள்ளது“ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.