தமிழகம்

திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி செல்லும்

செய்திப்பிரிவு

கடந்த 2011 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருச்செந்தூர் தொகுதியில் கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த பி.ஆர்.மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘இந்த தேர்தலில் பெரும் முறைகேடு செய்து அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக தபால் ஓட்டுகளை அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களே முறைகேடாக போட்டுள்ளனர். எனவே தபால் ஓட்டு போட்டவர்களின் கையெழுத்தையும், அது தொடர்பான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்” என அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச் சந்திரபாபு, ‘‘மனுதாரரின் குற்றச்சாட்டுகள் ஆணித்தரமாக இல்லை. தபால் ஓட்டுகளில் எங்கு முறைகேடு நடந்துள்ளது? இது தொடர்பாக யார் யாரிடம் விசாரிக்கப்பட்டது? என்பது குறித்த தகவல்களை மனுதாரர் தெரிவிக்கவில்லை. பொத்தாம் பொதுவாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். எனவே அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT