தமிழகத்தில் மழையால் 1.45 லட்சம்ஏக்கர் சம்பா பயிர்களும், 6 ஆயிரம்ஏக்கர் தோட்டக்கலை பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. பயிர் பாதிப்புகள் குறித்து அமைச்சர் குழுவின் அறிக்கை பெற்று முதல்வர், நிவாரணம் அறிவிப்பார் என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், பயிர்க்காப்பீடு மற்றும் பயிர் பாதிப்புகணக்கீடு தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரை பருவமழை தொடங்கும் முன்னரே,அனைத்து துறைகளின் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களை காணொலி மூலம் அழைத்து, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேளாண் துறையில்மாவட்டம்தோறும் அதிகாரிகளைத்தொடர்பு கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். அத்துடன், அனைத்துப் பகுதிகளிலும்பயிர் பாதிப்பு கணக்கெடுப்பை வேளாண் துறை அதிகாரிகள் துரிதப்படுத்தி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அறிந்து கணக்கு விவரத்தை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் 44 லட்சம் ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில்,1.45 லட்சம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. தற்போது மழை குறைந்துள்ளதால் டெல்டா பகுதிகளில் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. மழை முழுமையாக குறைந்ததும் கணக்கெடுக்கப்படும். 33 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு இருந்தால் அதை அறிந்து உரிய நிவாரணம் தர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
அதேபோல், 31.76 லட்சம் ஏக்கர்தோட்டக்கலை பயிர்களில் 6 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. மழை நீர் வடிந்ததும் முழுமையான பாதிப்பு தெரியும். தற்போது, பயிர் பாதிப்புகளை அறிந்து அதன்படி நிவாரண நடவடிக்கைகளை எடுப்பதற்காக, ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழுவை முதல்வர் அறிவித்துள்ளார். இவர்கள் டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுசெய்து, பாதிப்புகளைக் கணக்கிட்டு அறிக்கையை முதல்வரிடம் வழங்குவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் அளித்தபதில்கள்:
மத்திய அரசிடம் நிவாரணம் கேட்க வாய்ப்புள்ளதா?
அமைச்சர்களின் அறிக்கை கிடைத்த பின், முதல்வரே உடனடியாக பேரிடர் நிவாரண நிதியில்இருந்து நிவாரணத்தை அறிவிப்பார். அதன்பின் மத்திய அரசிடம் நிதி கோரப்படும்.
காய்கறி விலை உயர்ந்து வருகிறது. விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
இப்போது மழையின் தாக்கம் விவசாயத்தை பாதித்துள்ளது. விவசாயிகள் வேலைக்குச் செல்ல முடியவில்லை. தக்காளி விலை உயர்ந்துள்ளது. காய்கறி விலையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கின்போது, நடமாடும் காய்கறிக்கடைகள் மூலம் காய்கறிவிற்கப்பட்டதே? தற்போதும் அதே நடவடிக்கை எடுக்கப்படுமா?
கரோனா ஊரடங்கில் 48 ஆயிரம்நடமாடும் கடைகள் மூலம் காய்கறி,மளிகை வழங்கப்பட்டது. இப்போதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பயிர்க் காப்பீடுக்கு கால அவகாசம் வழங்கப்படுமா?
நவ.15-ம் தேதிக்குள் பிரீமியம் தொகை கட்ட வேண்டும் என்று அறிவித்தோம். கடந்த 9-ம் தேதி வரை 10.43 லட்சம் ஏக்கர் நிலங்களுக்காக, 8.8 லட்சம் விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் இணைத்துள்ளனர். கடந்தாண்டை விட 1.44 லட்சம் பேர் கூடுதலாக பயிர்க்காப்பீடு பிரீமியம் கட்டியுள்ளனர். இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், மழை பாதிப்பு உள்ளதால், காப்பீட்டுக்கான காலத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
இதில், மத்திய அரசும் இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, சனிக்கிழமை கூட காப்பீடு பணியை நடத்த அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். பயிர் பாதிப்புகுறித்து டெல்டா மாவட்டங்களில் அமைச்சர்களும், மற்ற பகுதிகளில்அதிகாரிகளும் பார்வையிடுவார் கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.