திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விழா கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. சூரசம்ஹாரத்துக்கு முன்பாக நடைபெற்ற யாகசாலை பூஜையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பெ.கீதாஜீவன், இந்து சமய அறநிலையத் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.
வழக்கமானதுதான்
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக, பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கந்த சஷ்டி விழா நடைபெறும் போது, ஆட்சியில் இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளின் பெயரில் அர்ச்சனை செய்யும் வழக்கம் ஆண்டாண்டு காலமாக நடைபெறுகிறது. மன்னர்கள் காலம் தொடங்கி பின்பற்றப்படும் நடைமுறைதான் இது. புதிதாக எதுவும் நடைபெறவில்லை’’ என்றனர்.