கோவை அருகே பாலியல் வழக்கில் கைதான 9 பேர் மீது கோவை நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கோவை அருகே பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் கொடுமை செய்ததாக சில இளைஞர்கள் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதுகுறித்து பொள்ளாச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 2019 ஏப்ரல் மாதம் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் சிபிஐ முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கிடையே, இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம், பாபு, ஆச்சிப்பட்டி ஹேரேன்பால் ஆகியோருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
8 பெண்கள் புகார்
இதையடுத்து, மூவரையும் கடந்த ஜனவரி 5-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அதைத்தொடரந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அருண்குமார் என்ற இளைஞரை இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்தது.
இதுவரை இந்த வழக்கில் 8 இளம்பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.