நங்கநல்லூரில் போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.36 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப் பட்டனர்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள ரெப்கோ வங்கியின் மேலாளர் கணேஷ், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். ‘‘வங்கியின் நகை மதிப்பீட்டாளர் நீலகண்டன் (50), அவரது தம்பி கணேஷ் (35), நண்பர்கள் ஜெயபாலன் (35), வீராசாமி ஆகியோர் சேர்ந்து போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்து ரூ.36 லட்சத்து 37 ஆயிரம் கடனாக பெற்று மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அதில் கூறியிருந்தார்.
விசாரணையில்..
புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவல் உதவி ஆணையர் ஜெயசிங், ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஒருவர் தலைமறைவு
அதைத் தொடர்ந்து நகை மதிப்பீட்டாளர் நீலகண்டன், கணேஷ், ஜெயபாலன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் வீராசாமியை தேடி வருகின்றனர்.