தமிழகம்

பிளஸ் 2 வேதியியல், கணிதப் பாடங்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குக: ஜி.கே.வாசன் கோரிக்கை

செய்திப்பிரிவு

கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதால் பிளஸ் 2 வேதியியல், சிபிஎஸ்இ கணிதப் பாடங்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகிறது. இதில் வேதியியல் பாடத்தில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது அவசியம். எனவே, மாணவர்களும், பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.

அதுபோல சிபிஎஸ்இ கணிதப் பாடத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து இதனை சரிசெய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதுபோல தமிழக கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிளஸ் 2 வேதியியல், சிபிஎஸ்இ கணிதப் பாடங்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT