சென்னையில் நேற்று மாலை முதல் பெய்துவரும் கனமழையால், நகரில் 444 இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 160 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி கனமழையைக் கொடுத்து வருகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னை வானிலை மையம் சில மணி நேரத்துக்கு முன் வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னைக்குத் தென்கிழக்கில் 130 கி.மீ. தொலைவிலும், புதுவைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மாலை முதல் பெய்துவரும் மிக கனமழையால், சென்னையின் பல சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை துண்டிக்கப்பட்ட மின்சாரம் இன்னும் வராததால் மக்கள் பெரிய சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இன்று மாலை வரை கனமழை நீடிக்கும். மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
200 ஆண்டுகள்
நவம்பர் மாதத்தில் இதுவரை சென்னையில் மட்டும் 709 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் இதுவரை 4 முறை மட்டும் நவம்பர் மாதத்தில் 1000 மி.மீ. மழையைக் கடந்துள்ளது. 1985-ம் ஆண்டில் சென்னையில் நவம்பர் மாதத்தில் 1101 மி.மீ., 1918-ம் ஆண்டில் 1088 மி.மீ., 2005-ம் ஆண்டு அக்டோபரில் 1078 மீ.மீ., 2015-ம் ஆண்டு நவம்பரில் 1049 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்னும் 19 நாட்கள் இருக்கும் நிலையில் இந்த மாதத்திலும் 1000 மி.மீ. மழையைத் தொட்டாலும் வியப்பில்லை.
சென்னையில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து விமான வருகை இன்று மாலை 6 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னையிலிருந்து விமானங்கள் புறப்படுவதில் எந்தத் தடையும் இல்லை.
சென்னையில் மொத்தம் 444 இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாக, அதில் 27 இடங்களில் மட்டும்தான் நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை பெருநகரக் கட்டுப்பாட்டு மற்றும் உதவி எண்ணுக்கு இதுவரை 11,817 புகார்கள் வந்துள்ளன. இதில் 5,419 புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழைக்கு இதுவரை 160 மரங்கள் வேரோடு சாய்தன. அதில் 147 மரங்கள் வெட்டி, அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சி சார்பில் நகரில் 68 மையங்களில் தற்காலிக முகாம் திறக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 2.96 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
13 சுரங்கப்பாதைகள் மூடல்
சென்னையில் உள்ள 13 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் அவற்றில் போக்குவரத்தைத் தடை செய்து அதிகாரிகள் மூடியுள்ளனர். ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மெட்லே சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, எம்சி சாலை, கணேசபுரம், நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், அரங்கநாதன் சுரங்கப்பாதை, ஆர்பிஐ சுரங்கப்பாதை, மாணிக்கம் நகர், பழவந்தாங்கல் உள்ளிட்ட சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.