தமிழகம்

மதுரை அரசு மருத்துவமனையில் கதிரியக்க சிகிச்சை நிறுத்தம் : கவலையில் தென் தமிழக புற்றுநோயாளிகள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைப் பிரிவில், கோபால்ட் கதிர்வீச்சு மருந்து நிரப்பும் பணி முடிந்தும், அணு ஆராய்ச்சிக் கழக ஒப்புதல் கிடைக்காததால், கதிரி யக்கச் சிகிச்சை தொடங்கப்படாமல் உள்ளது. இதனால், தென் தமிழகம், கேரள மாநில புற்றுநோயாளிகள் கடந்த ஒரு மாதமாக கதிரியக்க சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு தென் தமிழகம் மற்றும் கேரளத்தில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்கு அதிகளவு நோயாளி கள் வருகின்றனர். ஆண்டுதோறும் உள்நோயாளிகளாக 45 ஆயிரம் பேரும், வெளிநோயாளிகளாக 55 ஆயிரம் பேரும் இந்த சிகிச்சைக்கு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் புற்று நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது. இங்கு புற்று நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை, மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை என 3 முறைகளில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

கதிரியக்கச் சிகிச்சைக்குத் தேவையான கோபால்ட் கதிர்வீச்சு மருந்து, மும்பை பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தில் இருந்து ஐந்தரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரவழைக்கப்பட்டு நிரப் பப்படுகிறது. கடைசியாக, 2009-ம் ஆண்டு கதிர்வீச்சு மருந்து நிரப்பப்பட்டது. தற்போது ஐந்தரை ஆண்டுகள் நிறைவு பெற்றதால், கடந்த மாதம் 25-ம் தேதி பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தில் இருந்து கோபால்ட் கதிர்வீச்சு மருந்து வரவழைக்கப்பட்டு நிரப்பப்பட்டது.

இந்த ஆண்டு முதல்முறையாக, இந்திய தயாரிப்பு கோபால்ட் கதிர்வீச்சு மருந்து நிரப்பப்பட் டது. அதனால், அடுத்த 12 ஆண்டு களுக்கு இனி கோபால்ட் மருந்து நிரப்பத் தேவையில்லை எனவும், கடந்த 24-ம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே கதிரியக்க சிகிச்சை நிறுத்தப்படுவதாக மருத் துவமனை நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2 வாரங்களுக்கு மேலாகியும், இன்னும் கதிரியக்க சிகிச்சை தொடங்கப்படவில்லை. இதனால், புற்றுநோயாளிகள் கடந்த ஒரு மாதமாக தினமும் மருத்துவ மனைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறியதாவது: கோபால்ட் கதிர்வீச்சு மருந்தை நிரப்பியபின், சம்பந்தப்பட்ட கதிரியக்க பாதுகாப்பு அதிகாரி அணு சக்தி கட்டுப்பாட்டுக் கழகத்துக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பி சிகிச்சையை ஆரம்பிக்க ஒப்புதல் பெற வேண்டும். இந்த ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்காததால், புற்றுநோயாளிகளுக்கு நோயின் தீவிரம் மேலும் அதிகரிக்க ஆரம் பித்துள்ளது. ஒரு நோயாளிக்கு கதிரியக்க சிகிச்சை 28 நாட்கள் அளிக்கப்படும்.

இந்த கதிரியக்க சிகிச்சை ஆரம்பித்து இருந்தால், தினமும் 100 பழைய நோயாளிகள், 20 புது நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து இருப்பார்கள். இந்த சிகிச்சையைப் பெற தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில் தற்போது இந்த சிகிச்சை பிரிவு செயல்படாததால், வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சையைத் தொடருகின்றனர். நடுத்தர, ஏழை மக்கள், சிகிச்சை பெற முடியாமல் கவலை அடைந்துள்ளனர் என்றார்.

தாமதப்படுத்தும் அணு ஆராய்ச்சிக் கழகம்

மருத்துவமனை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது: கோபால்ட் மருந்தை நிரப்பி 20 நாட்களுக்கும் மேல் சிகிச்சையைத் தொடங்க காத்திருக்கிறோம். பலமுறை பேக்ஸ், இ-மெயில் மூலம் மும்பை அணு ஆராய்ச்சிக் கழகத்தின் ஒப்புதலைப் பெற தகவல் அனுப்பினோம். அவர்களோ, எங்களுக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளை பார்க்க வேண்டிய நிலை உள்ளதாகக் கூறி, அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர். அவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ளவே முடியாத நிலையில் இருக்கிறோம். நோயாளிகளின் நிலை எங்களுக்கும் புரிகிறது. விரைந்து ஒப்புதல் பெற முயற்சி செய்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT