தமிழகம்

திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 ஆதார விலை வழங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.4ஆயிரம் என உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெல் மூட்டைகளை நேடியாக அரசுகொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும்போது, நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்படாமல் திறந்த வெளியில் வைக்கப்படுவதாகவும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மூட்டைகளில் நெல் முளைக்க ஆரம்பித்துவிட்டதாகவும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.

மேலும், நேரடி நெல்கொள் முதல் மையத்தில் விவசாயிகள் கொண்டுவரும் நெல் முழுவதும்உடனுக்குடன் கொள்முதல் செய்யவேண்டும். அப்போதுதான் விவசாயிகளை தற்கொலையில் இருந்து காப்பாற்ற முடியும். குவிண்டாலுக்கு ரூ.100 கையூட்டு கேட்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

‘விடியலை நோக்கி’ என தேர்தல்பிரச்சாரத்தை தொடங்கிய திமுக,ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கு ஆதார விலையை ரூ.2,500 ஆகவும்,கரும்புக்கு ரூ.4 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றுதேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதுகுறித்து வாய்மூடி மவுனம் காக்கும் அரசாக விவசாய விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்த நிலையில் இந்த ஆண்டுக்கான நெல்லுக்கு ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,015, 10 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,900 என்றும், அதற்கு குறைவான பிழிதிறன் கொண்ட கரும்புக்கு ரூ.2,755 என்றும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற வாக்குறுதிகளைப் போல், ஆட்சியின் முடிவில் நெல், கரும்புக்கான ஆதார விலை வாக்குறுதியை நிறைவேற்றலாம் என்ற முடிவில் தமிழகஅரசு இருந்தால், விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்காது.

மேலும் கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். டெல்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளை அனுப்பி, ஆய்வு செய்து நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

வாக்களித்த விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நெ ல்லை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயி்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT