தமிழகம்

மழைநீரை உடனடியாக அகற்ற தற்காலிக பணியாளர்கள் நியமனம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் மழைநீரை உடனடியாக அகற்ற தற்காலிக பணியாளர்களை நியமிக்க மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி பகுதியில் அதிகனமழையை எதிர்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம், நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய சென்னை எம்பி, தயாநிதிமாறன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் நாளை (இன்று) அதிகளவில் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கெனவே 400-க்கும் மேற்பட்ட இடங்களில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவையான அளவுக்கு இரவுக்குள் மோட்டார்கள் கொண்டுவரப்பட உள்ளன. மக்களுக்கு தேவையான உணவு வழங்கப்படும். மருத்துவ உதவிகள் ஆங்காங்கே உள்ள பகுதிகளில் தரப்படும். வட்ட வாரியாக தேவையான அளவுக்கு இன்று இரவே தற்காலிக பணியாளர்களை நியமித்துக் கொள்ள, மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனுக்குடன் ஊதியம் வழங்க தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவையான ரொட்டி, பால், பழம் வழங்குவதுடன், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவில் இருந்தே அதிகாரிகள் அப்பணிகளை மேற்கொள்கின்றனர். ஏற்கெனவே தேங்கிய இடங்களில் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்யும் மழைநீரை அகற்றவும் அதிகளவில் மோட்டார்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மழைநீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படவில்லை. மொத்தமுள்ள 2700 கிமீ கால்வாயில் 771 கிமீ 3 மாதங்களில் தூர்வாரப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த அளவுக்காவது பாதுகாப்பாக உள்ளோம்.சென்னையில் மழைநீர் வடிவதில் சிக்கல் உள்ள 160 இடங்கள் கண்டறியப்பட்டு வருங்காலங்களில் அப்பகுதியில் தண்ணீர் தேங்கா வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT