திருத்தணி, திருப்போரூர் முருகன் கோயிலில்களில் நேற்று திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் மாலை புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதற்காக காவடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் சண்முகருக்கு சுமார்ஒரு டன் எடையுள்ள பல வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவின் நிறைவாக நேற்று காவடி மண்டபத்தில் கல்யாண உற்சவர் முருகன், தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருக்கல்யாண நிகழ்வின் போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பின்னர், திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பலர் இந்நிகழ்ச்சியை யூடியூப் சேனல் மூலம் கண்டு மகிழ்ந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நிறைவு நாளான நேற்று உற்சவ மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க தெய்வானை, முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது.திருக்கல்யாணம் நிறைவு பெற்றதும் சிறப்பு மலர் அலங்காரத்தில் தம்பதி சமேதராய் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் தார்.